கவியரசர் முடியரசனாரின் வள்ளுவர் கோட்டத்தில் பொதுவுடைமை
முகவுரை:
பாவேந்தர் பாரதிதாசனாரால் ‘தன் மூத்த வழித் தோன்றல்’ என்றும், ‘தனக்குப் பிறகு கவிஞன் என்றும் பாராட்டப் பெற்ற கவியரசர் முடியரசன் தம் வாழ்நாள் முழுமையும் வள்ளுவ நெறிப்படி வாழ்ந்த பெருந்தகையாளர். அவர் கவியரங்கப் பாடல்களும், தனிப் பாடல்களுமாக வள்ளுவம் பற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பே ‘வள்ளுவர் கோட்டம்’ என்ற நூல். கவிஞர் அந்நூலின் முன்னுரையில் ‘தண்ணீர் மேல் மட்டத்திலேயே தோன்றிக் காட்சி இன்பம் தரும் தாமரை மலர் போன்று மேலோட்டமாகப் பயில்வார்க்கு இன்பம் பயப்பனவும் இந்நூலுள் உண்டு. நீந்திக் குளிப்பார் பெறும் இன்பம் போல, இறங்கி நீந்துவாரும் இன்பம் மாந்திக் களிப்பர். மூழ்கி எழுவார், உயரிய பொருள்கள் பெற்றுத் துய்த்தலும் ஆகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில் கவிஞரின் வள்ளுவர் கோட்டத்தில் ‘பொதுவுடைமை’ என்னும் முத்து சேகரிக்க மூழ்கி எழுந்த முயற்சியே இக்கட்டுரை.
பாட்டுப் பரம்பரையில் பொதுவுடைமை:
கவியரசர் முடியரசனார் தமிழ்க் கவிதா மண்டலத்தில் மகாகவி பாரதியாரைத் தன் பாட்டனாராகவும், புரட்சிக்கவி பாரதிதாசனாரைக் தன் தந்தையாகவும் கருதி வாழ்ந்தவர் ஆவார்.
பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணப்பட்ட பொதுவுடைமை எண்ணங்கள் இடைக்காலத்தில் நீறு பூத்த நெருப்பாகத் தணிந்து, பின் பாரதி காலத்திலிருந்து மீண்டும் கனன்றெழுந்து புதிய வீச்சோடு பரவத் தொடங்கியது.
பாரதி விடுதலை வேட்கையோடு பாடிய காலத்தில் பொதுவுடைமைக்கும் உரிமைக்குரல் எழுப்பினார்.
‘முப்பது கோடி சனங்களின் சங்க
முழுமைக் கும்பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை? ’ என்னும் பாடலில் ‘பொது உடைமை’ என்ற சொல்லாட்சியைக் கவிதையில் முதலில் பயன்படுத்தி பொதுவுடைமைக்கு புதிய முகவுரை தந்தார். பாரதி வழிவந்த பாரதிதாசனும்,
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம்
இதுஎன தென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒரு பொருள் தனிஎனும் மனிதரைச் சிரிப்போம்
என்னும் கவிதையைப் போன்று பல வீறுமிக்கப் பாடல்களை எழுதி பொதுவுடைமைப் புரட்சி செய்தார். பாரதிதாசன் பரம்பரையில் தோன்றிய கவிஞர்கள் பலரும் பொதுவுடைமைப் பாடல்கள் பாடுவதில் தணியாத தாகம் கொண்டு பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பினர். அவ்வகையில் கவியரசர் முடியரசனாரும்
பாடிடு வேன்புது வுலகை அங்கே
படைத்திடு வேன்பொது வுடைமை
சாடிடு வேன்வரும் படையைத் தாக்கிச்
சமர்புரி வேன்அது கடமை (பாடுங்குயில், ப. 128)
என்று பாடி பாரதிஇ பாரதிதாசன் பாட்டுப் படையில் முன்னிற்கும் பொதுவுடைமைப் போர்த் தளபதியாய்க் கவியரசர் காட்சியளிக்கிறார்.
வள்ளுவர் கோட்டத்தில் பொதுவுடைமை:
நாம் பயணிக்கும் வாழ்வுப் பாதையில் இரு கிளை வழிகள் இருப்பதாகக் கவிஞர் குறிப்பிடுகிறார். அருள் என்னும் பெருவேந்தன் ஆட்சி செய்யும் அறிவுலகைப் பொதுமை நலம் பூத்துநின்று பரவுகின்ற புத்துலகைக் காண எண்ணிப் பரிவுடனே விரைந்து செல்கின்ற நம் முன் இரு வழிகள் கிளை வழிகளாகப் பிரிந்து செல்கின்றன. அதில் ஒரு வழி மனு வழி. மற்றnhரு வழி பெருமை மிகுந்த ‘தமிழ்’ வழி. இவ்விரு வழிகளில் வள்ளுவப் பேராசான் தம் உலகப் பொதுறை நூலின் மூலம் நல்வழியாகிய தமிழ்வழி செலுத்துகின்றார். வள்ளுவர் கூறும் பொதுவுடைமை வழியில் சென்றால் நமக்கும், நாட்டுக்கும் அது நலம் பயக்கும். மனு வழியிற் சென்றால் கொடுந் தீமைகளே வந்து சேரும் (குறள் மனிதன் குறிக்கோள், ப. 37) என்று வழிகாட்டுகின்றார்.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நெறியை மக்கள் அனைவரும் நாடாவிட்டால் ‘ஒற்றுமை இங்கு உருப்படுமா? மக்களுக்குள் பற்றுள்ளம் தோன்றிப் பரவிடுமா? ‘ என்று வினா எழுப்புகின்ற கவிஞர் வள்ளுவர் இன்று வந்தால் குமுகாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு வருந்தும் நிலையைக் கற்பனை செய்து பாடுகிறார்.
‘மஞ்சு தவழ்ந்து வரும் மாடமனை ஓர்புறத்து
விஞ்சும் எழில் தாங்கி வீறுபெற நின்றிலங்கும்
ஓடென்றுங் காணா தொழுகுஞ் சிறுகுடில்கள்
வீடென்ற பேரால் விளங்கும் மறுபுறத்தே
மேடென்றும் பள்ளமென்றும் மேலென்றுங் கீழென்றும்
நாடின்னும் சொல்லி நடப்பதெலாங் கண்டிடுவான்
கண்டால் வெகுண்டு கவியைக் கணையாகக்
கொண்டே உலகைக் கொளுத்தும் நிலைபெறுவான்
எல்லாரு மிந்நாட்டு மன்னரெனச் சொன்ன பினும்
பொல்லா நிலையைத்தான் பொய்யா மொழி காண்பான்
இந்நாட்டு மன்னர் இரந்துமுயிர் வாழ்வதுபோல்
எந்நாட்டுங் காணா இயல்பதனைக் காணுங்கால்
வெம்பித் துடிக்காமல் வேறென்ன செய்திடுவான்
அம்புவியைத் தந்தோன் அமைத்ததிது வென்றால்
படைத்தவன் இங்கே பரந்தொழிக என்றே
வெடுக்கென்று கூறாமல் வேறென்ன பேசிடுவான்? ‘
(வள்ளுவர் இன்று வந்தால்.. , பக். 61, 62)
என்று வள்ளுவரின் சீற்றத்தை நம் கண்முன் கொண்டுவரும் இக்கவிதையில் குமுகாய அவலத்தைக் கண்டு கொதித்தெழுகின்ற வள்ளுவரின் மறுவுருவாகவே கவிஞர் தென்படுகிறார்.
‘தனியொருவனுக்கு உணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றும்,
‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்றும்இ ‘பாரத சமுதாயம்’ பாடிய பாரதியில் வள்ளுவரையும்,
‘இரந்து முயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’ என்று பாடிய வள்ளுவரில் பாரதியையும் காணுகின்ற கவிஞரின் உள்ளம் நினைந்து போற்றுதற்குரியது.
பொதுவுடைமை காணும் வழி:
சாதிகளை ஒழித்தால்தான் பொதுவுடைமைக் குமுகாயம் செழித்தோங்கும் என்பதில் உறுதியான எண்ணம் கொண்டிருந்தார் முடியரசனார். ‘சாதிகளை ஒழித்து எல்லோரும் ஓரினமாய்ப் பொதுமையுணர்வோடு வாழும் போதுதான் குமுகாயம் உயரும் வள்ளுவருக்கும் மகிழ்வு தோன்றும்’ (சாதிப்போர், ப. 17) என்றுரைக்கின்றார். எல்லோரும் ஓரினமாய்ப் பொதுவுடைமைப் பண்போடு வாழ சாதிகளை ஒழிப்பதோடு மட்டுமன்றி அன்பு நெறியும் பரவ வேண்டுமென்பதை
மற்றோரை வாழ்வித்துத் தாமுமிங்கு வாழுமனம்
அறறோh;பால் நெஞ்சுருகும் அன்புநெறி காண்பதெங்கே
அன்புநெறி இல்லையெனில் ஆருயிரைத் தன்னுயிர்போல்
எண்ணும் அருள்நெறிதான் எங்கே தழைத்து வரும் (கனவின் நிழல், ப. 21)
என்று அன்புநெறியின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
பொதுமை காட்டும் பொதுமறை:
‘பொதுநூல்’ என்னும் பாடலில் திருக்குறள் எத்தன்மையது என கவிஞர் குறிப்பிடும்பொழுது சமயங்கள் எல்லாம் புகன்ற உயர்ந்த அருள் நெறியும், நெஞ்சைக் கனிவிக்கும் நேர்மைமிகு ஆத்திகமும், நெஞ்சத் துணிவுரைக்கும் நேரில்லா நாத்திகமும் கூறும் வாழ்க்கைத் துணை நூல் என்று போற்றுகின்றார். மேலும்,
என்றுவரும் என்று வரும் என்றே எதிர்நோக்கி
நின்றுலகம் நோக்கும் நிலைத்த சமத்துவமும்
எல்லாப் பொருளும் இதன்பால் உளவென்று
நல்லோர் புகழ்ந்துரைத்த நல்ல திருமறைநூல்
சாதி கடந்து சமயத்திற் கப்பால் நின்
றோதும் உயரறநூல் ஒற்றுமையைச் சீர்குலைக்கும்
பொல்லா அரசியற்குப் போகாத் தனிப்பெரு நூல் ( பொதுநூல், ப. 27)
என்று பொதுமை காட்டும் பொதுமறைக்கு புகழ்மாலை சூட்டுகின்றார்.
சிறந்த உடைமை:
இன்றைய சூழலில்செல்வமென்றால் பெரிய மாட மாளிகை, விளை நிலங்கள், பெரும் நிதி, மணி, பொன் போன்றவற்றால் செய்த அணிகலன்கள், விலையுயர்ந்த ஊர்தி இவை போன்று இன்னும் எதை எதையோ உடைமை என்று நாட்டில் பெறுவதற்குத் துன்புறுகிறோம். இவைதான் நாம் தேடவேண்டிய உடைமையென்றெண்ணி அவற்றைப் பெறுவதற்கு அலைந்து திரிந்து தந்திரம், வஞ்சனை, பொய்ம்மை என்று எவற்றையெல்லாம் செய்தேனும் வளமோடு வாழ ஏங்குகின்றோம் பிறர் உயிரை வாங்குகின்றோம். பிறரோடு சண்டையிட்டு உடைமைகளைத் தேடுகின்றோம் என்று உள்ளம் வெதும்பும் கவிஞர்,
எல்லாமே தனக்குரிமை என்று நாளும்
ஏப்பமிடுந் தனியுடைமை யுலக மொன்றாம்
இல்லாமை யில்லாமற் செய்து காக்க
எல்லார்க்கும் பொதுவாகும் உடைமை என்று
மல்லாடும் பொதுவுடைமை உலகம் ஒன்றாம்
(வள்ளுவர்கண்ட உடைமைகள், ப. 42)
என்று உலகின் இருவேறு நிலைகளைக் காட்டுகின்ற கவிஞர்,
தென்னகத்தே தோன்றியநல் லுரிமை தன்னால்
தீந்தமிழ்க்குத் தனியுடைமை யாகி நின்று
மன்னுயிர்க்கே பொதுமையறம் உரைப்ப தாலிம்
மாந்தர்குலப் பொதுவுடைமை யாகி விட்ட
தன்னிகர்த்த திருக்குறள்நூல் வகுத்த மைத்துத்
தருகிற உடைமையெலாம் மறந்து விட்டோம்
பொன்னினைத்தே மண்ணினைத்தே மயங்கி நின்று
போராடித் திரிகின்றNhம் பகைமை கொண்டோம்
(வள்ளுவர்கண்ட உடைமைகள், ப. 42)
என்று வள்ளுவர் காட்டும் உடைமைகளான அன்புடைமை, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பண்புடைமை, நாணுடைமை, பொறையுடைமை ஆகியவற்றைத் தேட வேண்டுமென்று குறிப்பிடுகின்றார்.
வள்ளுவர் சொல் லுடைமையெலா மவ்வ வர்க்கு
வாழ்வளிக்குந் தனியுடைமை யாகுங் கண்டீர்!
வௌ;ளமெனச் சேர்ந்துறையும் மன்ப தைக்கு
விழவுதரு பொதுவுடைமை யாகுங் கண்டீர்.
(வள்ளுவர்கண்ட உடைமைகள், ப. 45)
என்று வள்ளுவர் உரைத்த உடைமைகள் பத்தும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவுடைமைச் செல்வம் என்று சுட்டிக் காட்டுகிறார்.
நிறைவுரை:
இக்கட்டுரை குறிப்பிடுவது போல் வள்ளுவர் வகுத்தளித்த வான்புகழ் வள்ளுவம் காட்டும் பொதுவுடைமைப் பாதையில் மனித குலம் சென்றால் வளமும், நலமும் மிகுந்த வாழ்வும், நாடும் அனைவருக்கும் கிட்டும் என்பதை கவியரசர் தன் வள்ளுவர் கோட்டத்தின் வழி வலியுறுத்துகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக