மரபின் வேரிலிருந்து...
கவியரசர் முடியரசனாரின் கடிதவிலக்கியத்தில் பண்பாட்டுக் கூறுகள்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி.
முகவுரை:
பழந்தமிழரின் பண்பாட்டுத் தளங்களிலிருந்து தடம் மாறாமல், மரபு மீறாமல் மூடப்பழக்க வழக்கங்களை முட்டறுக்கவும், மொழி-இனம் நலன் காக்கவும், தமிழ்க் குமுகாயம் மறுமலர்ச்சி பெறவும் தம் வாழ்நாள் முழுதும் இனவெழுச்சிப் பாடல்களைப் பாடியதோடு, அவற்றைத் தம் வாழ்விலும் கடைபிடித்த தமிழியப் புரட்சிக் கவிஞர் கவியரசர் முடியரசனார் ஆவார். கவிதை, காப்பியம், கட்டுரை, சிறுகதை, கடிதம் எனப் பல்வேறு படைப்பு வடிவங்களில் தமிழ்ப் பண்பாட்டைக் காக்க முனைந்த பண்பாளர். அவர் படைத்த கடிதவிலக்கியத்தில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
முடியரசனாரின் கடிதவிலக்கியம்:
வெளியூரில் தங்கிப் பயிலும் இளவரசன், பாண்டியன் ஆகிய இரு மகன்களைக் கடிதம் வழி நெறிப்படுத்தும் ஒரு தந்தையாகக் கவியரசர் முடியரசனார் ‘அன்புள்ள இளவரசனுக்கு’, ‘அன்புள்ள பாண்டியனுக்கு’ என்னும் இரு கடிதவிலக்கிய நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘அன்புள்ள பாண்டியனுக்கு’ நூலின் முதல் கடித முன்னுரையில் இக்கட்டுரையின் நோக்கத்தினையே அவரும் வலியுறுத்தியுள்ளார். அக்கடிதத்தில் “நம் நாட்டின் பண்பாடுகள் இன்று நேற்றுத் தோன்றியவையல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்று தொட்டுத் தொடர்ந்து வருவன் உலக மக்கள் அனைவராலும் பாராட்டிப் போற்றப்பட்டு வருவன் இன்று நாகரிகம் மிக்க நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள், பண்பாடு இன்னதென அறியாக் காலத்திலேயே, இங்குத் தோன்றி வளர்ந்து வந்த பெருமையை உடையன. அத்தகைய பண்பாடுகள் இன்று நாளுக்கு நாள் அருகிவரும் நிலையைக் காணுகின்றேன். அவை மீண்டும் தழைத்து வளர வேண்டுமென்ற ஆர்வத்தால், பண்பாடுகளை வளர்க்கத்தக்க கடிதங்களையே இனியெழுத விரும்புகிறேன” என்று அவர் குறிப்பிட்டிருப்பது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அரண் சேர்க்கிறது, கவியரசர் முடியரசனார் ‘அன்புள்ள பாண்டியனுக்கு’ கடிதவிலக்கிய நூலின் 15 கடிதத் தலைப்புகளையும் ஏவல் சொற்றொடர்களில் அமைத்து, நிறைவில் தலைப்புகளுக்கேற்ற குறட்பாவோடு முடித்திருப்பது தனிச் சிறப்பு.
அன்பும், அறனும்:
‘அன்பாய் இரு’, ‘அறஞ் செய்ய விரும்பு’ என்னும் முதலிரு கடிதங்களில் தமிழர் அன்புள்ளம் கொண்டோராய், நல்லறங்களைச் செய்து வாழ வேண்டுமென்று விழைகின்றார். குடும்ப வாழ்க்கைக்கு மட்டுமன்றித் குமுகாய வாழ்க்கைக்கும் அன்பு கட்டாயம் வேண்டப்படுவதாகுமென்றும், கூட்டு வாழ்க்கைக்கு அன்பே சிறந்த துணை என்னும் வலியுறுத்துகின்றார். ஒருவன் முழுமை பெற்றவனாக விளங்க, வாழ்வில் சிறந்து செழித்து வளர, குமுகாயத்தில் கூடி வாழ, தன்னலமற்ற பொதுநலம் பேண அன்புடையவராக நாம் வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
‘சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல’
என்று புறநானூறு புகல்வதைப் போன்று அறத்தால் வரும் இன்பமும், பொருளுமே சிறந்தவை என்று மேற்கோள் காட்டுகிறார். இயன்றளவு அறத்தினை இடைவிடாது செய்ய விரும்பவேண்டும், அறத்தைப் போல உற்ற துணை, அழியாத் துணை மற்றொன்றில்லை என்றுரைக்கும் கவிஞர் இப்பருவத்திலே இவ்வளவுஞ் செய்துவிட முடியுமோ என்று மலைக்க வேண்டாம். அதனால்தான் அறஞ்செய் என்றுஎழுதாமல் அறஞ்செய்ய விரும்பு என்றெழுதியதாகக் குறிப்பிடுகிறார். ‘மனத்தால் நினைப்பதுவும் செய்வதற்கு நிகராகும்’ என்றுரைக்கும் வள்ளுவத்தின்று முதலில் மனத்தால் விரும்பவேண்டும். விருப்பம் வளர வளரப் பருவமும் வளரும். வளர்ந்த பின்னர், அது செயலுருவம் பெறும். எனவே, மாணவப் பருவத்திலேயே அறஞ்செய்ய வேண்டுமென்று ஆசையை வளர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றார்.
இணக்கம் அறிந்து உண்மை விளம்பல்:
‘இணக்கம் அறிந்து இணங்கு’ என்ற கடிதத்தில் இனிய நட்பிற்கும், கூடா நட்பிற்கும் வேறுபாடுரைக்கும் முடியரசனார் நல்லோரை ஆராய்ந்தறிந்து, உண்மை நட்பின் இயல்பையுணர்ந்து, போலி நட்பின் இயல்பைப் புரிந்து, வேண்டும் நட்பை விரும்பி, வேண்டா நட்பை விலக்கி வாழ வேண்டுமென்றுரைக்கிறார்.
‘உண்மைவிளம்பு’ என்னும் கடிதத்தில் ஏனைய அறங்களைச் செய்யாவிடினும் குற்றமில்லை; பொய்யாமை என்னும் அறத்தைச் செவ்வனே கடைபித்து ஒழுகினாலே போதும், ஏனைய அறங்கள் தாமே வந்தெய்தும் இத்தகைய தலைசிறந்த அறத்தைக் கைக்கொண்ட நம் சான்றோர் ‘பழியெனில் உலகுடன் பெறினுங் கொள்ளாதவராகி’ (புறநானூறு) வாழ்ந்தனர். அவர்கள் வழிவந்த நாமும் எத்தகைய துன்பம் வரினும் உண்மையையே விரும்ப வேண்டும். உண்மையையே விளம்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
ஒழுக்கமும், ஒப்புரவும்:
‘ஒழுக்கம் கைக்கொள்’ என்னும் தலைப்பிலான கடிதத்தில் ‘ஒழுக்க நெறிகளைக் கற்றலாவது, அவற்றை இடைவிடாது பழக்கத்திற் கொணர்தலாகும். அறநூல்கள் கூறும் நெறிகளிலும், சான்றோர் ஒழுகிய நெறிகளிலும் இக்காலத்திற்குப் பொருந்தாதனவற்றை நீக்கிப் புதிய நெறிகளிற் பொருந்துவன கொண்டு நடத்தலே ஒழுக்கம் எனப்படும்’ என்று ஒழுக்கத்திற்கு அரியதொரு விளக்கம் தருகின்றார்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
என்னும் குறட்பாவில் வள்ளுவர் நல்லொழுக்கத்தை வித்தென்றும், தீயொழுக்கம் இடும்பை தரும்’ என்று குறிப்பிட்டதற்கு கவிஞர் நுட்பமான பொருளுரைக்கின்றார். ‘நிலத்தில் ஊன்றிய வித்து உடனே கனி பயந்து விடுவதில்லை. அது முளைவிட்டுச் செடியாகி, மரமாகிப் பூத்துக் காய்த்துப் பின்னரே கனி தருகிறது. அது போலவே நல்லொழுக்கமும் உடனே இன்பம் பயவாது. காலஞ் செல்லச் செல்லப் பயன்தரும். அதனால்தான் வள்ளுவர் அதனை ‘வித்து’ என்றுரைத்துள்ளார். ஆனால் தீயொழுக்கம் அவ்வாறன்று, கால நீட்டிப்பின்றி உடனே பயன்தந்துவிடும். இதனையுணர்த்தவே வள்ளுவர் தீயொழுக்கத்தை வித்தென்று உருவகம் செய்யாது ‘இடும்பை தரும்’ என்ற அளவிற் கூறினார்’ என்று நுண்பொருள் தருகிறார். உடனே துன்பம் பயக்கும் தீயொழுக்கத்தை விடுத்து, காலஞ்செல்லச் செல்ல மிகுந்த பலனளிக்கும் நல்லொழுக்கத்தை கைக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்.
‘ஒப்புரவொழுகு’ என்னும் கடிதத்தில் ஒப்புரவு என்னும் சொல் தன்னைப் போலப் பிறரையும் ஒப்பாக - ஒன்றாகக் கருதி வாழ வேண்டும் என்றுணர்த்துகிறதென்றும், வள்ளுவர் ஒப்புரவாளனுக்குக் குறிப்பிடும் ஊருணி, பயன்மரம், மருந்துமரம் போன்ற உவமைகளைப் போன்று பிறர் இடர்தரினும், இழிமொழி கூறினும் அக்குறை நோக்காது, உடல், பொருள், உயிர் ஆகிய அனைத்தாலும் பயன்பட வாழ்ந்திட வேண்டுமென்று ஒப்புரவின் மேன்மையை எடுத்துக் காட்டுகின்றார்.
நன்றி மறவாமையும், நா நலமும்:
‘நன்றி மறவேல்’ என்னும் கடிதத்தில் காலத்திற்செய்த உதவி, கைம்மாறு கருதாது செய்த உதவி, காரணமின்றிச் செய்த உதவி ஆகியவற்றின் நம்மை உலகை விட, கடலை விட, வானை விடப் பெரியனவாகும், சூழ்நிலைகளுக்கும், தன்னலத்திற்கும் இடங்கொடாது செய்ந்நன்றியுறியும் வல்லானை இவ்வுலகம் என்றும் ஏத்திப்புகழும்; என்றுரைக்கும் கவிஞர், கைம்மாறு கருதாமல் துரியோதனன் செய்த நன்றிக்காகப் போர்க்களத்திலே தன்னுயிரையும் கொடுத்த கன்னனின் நன்றிமறவாப் பண்பை நினைவுப்படுத்துகிறார்.
‘நா நலம் நாடு’ என்னும் கடிதத்தில் ஒருவர் பேசும்பொழுது அவையத்திலே உள்ளவருடைய குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், பருவம் முதலிய தகுதிகளை அறிந்து அவற்றிற்கேற்பப் பேச வேண்டுமேயன்றி அவையோர் கொண்டுள்ள கருத்திற்கேற்பத் தம்கருத்தை விட்டொழித்து உண்மைக்கு மாறாகப் பேசிவிடக்கூடாது. எங்கும், எப்பொழுதும், எச்சூழ்நிலையிலும் தம் கருத்தை விடுத்துப் பிறர் கருத்தினர் பின்னே செல்லுதலைச் சான்றோர் விரும்பார். அவையறிதல் என்பது அவையோர் நெஞ்சம் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்துகளை அவரவர் புரிந்து கொள்ளத்தக்க நடையில் பேச வேண்டுமென்பதாகும் என்றுரைக்கின்றார். நாநலம் நாட்டின் உயர்வுக்கும், மொழியின் வளர்ச்சிக்கும் பயன்படவும், நம் பண்பாட்டைக் காக்கும் பெருந்துணையாகுமாறு அமைத்துக் கொள்ள வேண்டுமென்று குறிப்பிடுகிறார்.
பணிவும், மானமும்:
‘பணிவுடன் பழகு’ என்னும் கடிதத்தில் கல்வியும், புகழும் வளர வளர செருக்குணர்வும் வளர்ந்து கொண்டே வரும். நாம்தாம் விழிப்பாக இருந்து அவ்வுணர்வை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும். அதனைக் கிள்ளியெறிந்தால் தான் பணிவென்னும் நல்லுணர்வு தளிர்த்துச் செழித்து வளரும். எனவே செருக்கை அடியோடு ஒழித்துக்கட்டி, பணிவுடன் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்விற் சிறந்து விளங்க மெய், நா, மனம் இம்மூன்று அடக்கங்களும் இன்றியமையாதன என்றுரைக்கிறார்.
‘மானம் போற்று’ என்னும் கடிதத்தில் ‘பழியெனின், உலகுடன் பெறினுங் கொள்ளலர்’ என்று அறிவுரைக்கும் புறநானூற்று வரியையும்,
‘வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மான மழுங்க வரின்’
என்று நவிலும் நாலடியார் வரிகளையும் சான்றுகாட்டும் கவிஞர் மானம் பெரிதா? உயிர் பெரிதா? எனில் மானம்தான் பெரிதென்று உயிரை விட்டாவது மானம் காப்பதே தமிழர் பண்பாடு, அவ்வாறன்றி பரிமேலழகர் வடநூலார் கருத்தையுரைக்கும் ‘இறப்ப வருவழி, இளிவந்தன செய்தாயினும் உய்க’ என்பது தமிழருக்குப் பெருமை தராது என்று தமிழ்ப் பண்பாட்டை உயர்த்துகின்றார்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
என்ற குறட்பாவையும் சான்று காட்டி தமிழர்மானத்திற்கு வலுசேர்க்கின்றார்.
தாய்மொழி, தாயகம் போற்றல்:
‘தாய்மொழி பேண்’ என்னும் கடிதத்தில் தாய்மொழியைப் பேண வேண்டுமென்ற பற்றுள்ளத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தும் கவிஞர் தாய்மொழியை மறந்து, அயல்மொழிக்கே அடிமையாகி, அதற்காகப் பரிந்து பேசுகின்ற ஒருவன், தமிழனென்று தன்னைக் கூறிக்கொள்ள தகுதியற்றவனென்று வெகுண்டுரைக்கிறார். மொழிப்பற்று தான் முன்னேற்றத்தின் முதல் படி. ஆதலால் தாய்மொழியைப் பேணி, அயல் மொழிகளை அளவறிந்து பயன்படுத்தி வாழ்வதே தமிழரின் கடமை என்று வலியுறுத்துகின்றார். ‘தாயகம் காத்து நில்’ என்னும் தலைப்பிலமைந்த கடிதத்தில் நாடு பிடிக்கும் ஆசையால் சூழ்ந்து வரும் பகைமுடித்தல் ஒன்றுதான், தாயகத்தைக் காக்கும் தொழிலாகக் கருதக்கூடாது. தன்னலமொன்றே கருதும் சுயநலப் பாங்கினையும், காட்டிக் கொடுக்கும் கேட்டுக் குணத்தையும் அறவே ஒழித்துக் கட்டுவதும் தாயகம் காக்கும் தொழில்தான். இதுவே சிறந்த காப்பு என்று எடுத்துரைக்கின்றார். துள்ளிவரும் பகையைத் தூவென்றுமிழ்ந்து, தள்ளிவிடும் மனநிலையைப் பெற்றவராய்த் தாயகத்தைக் காத்து நிற்கும் தறுகண்மை உற்றவராய் வாழ்ந்து, நானிலம் போற்ற வளர்ந்து நிற்போமென்று வேண்டுகோள் விடுக்கின்றார். மேலும் ஓதுவதொழியேல், சோம்பித்தியேல், கேள்வி முயல் போன்ற கடிதங்களிலும் கற்றபடி நிற்கவும், சோம்பலைத்; தவிர்க்கவும், வினாக்களைத் தொடுத்து அறிவைப் பெருக்கவும் வழிகாட்டுகின்றார்.
நிறைவுரை:
பழந்தமிழரின் பண்பாட்டை மறந்து, மனம் போன போக்கில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று திசைமாறிச் செல்லும் இன்றைய நவநாகரிகயுகத்தில் வாழும் தமிழர்க்கு நம் பண்பாடு இன்னதென்று பாடஞ்சொல்லிப் பண்படுத்துவனவாய் முடியரசனாரின் கடிதங்கள் அமைந்துள்ளன. நம் தமிழ்ப் பண்பாட்டை மீட்டெக்க அதற்குத் தடையாய், முரணாய் நிற்பனவற்றை மோதித் தகர்க்கின்ற படைக்கலன்களாய் கவியரசர் முடியரசனாரின் கடிதங்கள் இலங்குவதை நம்மால் உணர முடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக